குஜராத், இமாசலபிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடையும்- பிரசாந்த் கிஷோர்


குஜராத், இமாசலபிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடையும்- பிரசாந்த் கிஷோர்
x

குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடையும். ராஜஸ்தான் மாநாடு எதையும் சாதிக்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

காங்கிரசில் சேர மறுப்பு

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட வியூகம் வகுத்து கொடுத்தார். அதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாடுபடுமாறு பிரசாந்த் கிஷோருக்கு சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார்.

பின்னர், தனது சொந்த மாநிலமான பீகாரில், 'ஜன் சுராஜ்' என்ற பிரசார இயக்கத்தை அவர் தொடங்கினார். அக்டோபர் 2-ந் தேதி முதல் பீகார் முழுவதும் 3 ஆயிரம் கி.மீ. பாத யாத்திரை நடத்தி மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளப்போவதாக அவர் கூறினார்.

அந்த பயணம் அடிப்படையில் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

எதையும் சாதிக்கவில்லை

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 'சிந்தனை அமர்வு' மாநாட்டை சமீபத்தில் நடத்தியது. அதுபற்றி பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது:-

உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாட்டின் பலன் குறித்து என்னிடம் திரும்ப திரும்ப கேள்வி கேட்கப்படுகிறது.

அந்த மாநாடு, ஏற்கனவே உள்ள நிலைமையை நீட்டித்து இருக்கிறதே தவிர, உருப்படியாக எதையும் சாதிக்க தவறிவிட்டது என்பதுதான் எனது கருத்து.

குஜராத்திலும், இமாசலபிரதேசத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அதில் ஏற்பட இருக்கும் தோல்வி வரைக்குமாவது காங்கிரஸ் தலைமைக்கு சற்று கால அவகாசம் கொடுத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story