காங்கிரசுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைய வேண்டும்: பிரசாந்த் கிஷோரின் அறிவுரையை நிராகரித்த நிதிஷ் குமார்!


காங்கிரசுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைய வேண்டும்: பிரசாந்த் கிஷோரின் அறிவுரையை நிராகரித்த நிதிஷ் குமார்!
x

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும், அரசியல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

பாட்னா,

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கும், அரசியல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) கட்சியை காங்கிரசுடன் இணைக்குமாறு பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியாக மாறியிருக்கும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2018ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் அவருடைய ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) கட்சியில் சேர்க்கப்பட்டார். தேசிய துணைத் தலைவர் ஆக இருந்தார்.பின்னர் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இப்போது பிரசாந்த் கிஷோர் 3,500-கிமீ நீண்ட தூர 'ஜன் சுராஜ்' என்ற பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை தனது நடைபயணத்தின் போது பேசிய பிரசாந்த் கிஷோர், "சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமாரை சந்தித்தபோது, மீண்டும் ஜே.டி.(யு) கட்சியில் இணைந்து தன்னுடன் இணைந்து பணியாற்றும்படி என்னிடம் கூறினார்.

நீங்கள் என் அரசியல் வாரிசு என்று என்னிடம் கூறினார். 'ஜன் சுராஜ்' பாதயாத்திரையை கைவிடும்படி கூறினார். ஆனால், எனக்காக முதல் மந்திரி நாற்காலியை நிதிஷ்குமார் காலி செய்தாலும், நிதிஷ்குமாருடன் நான் இணைந்து பணியாற்ற மாட்டேன்" என்று பேசினார்.

பிரசாந்த் கிஷோரை மீண்டும் ஜே.டி.(யு) கட்சியில் இணைத்துக்கொள்ள நிதிஷ்குமார் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து இன்று பேசிய நிதிஷ்குமார், "நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பிரசாந்த் கிஷோர் என்னை காங்கிரசுடன் இணைக்கச் சொன்னார். அவர் தற்போது பா.ஜ.க.வுக்கு சென்று அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார்.

அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.அது பொய்.அவருடைய கருத்துக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். இது அவருக்கு நல்லது. அவருக்கு அங்கு (பாஜக) பதவி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story