ஒடிசாவில் ஜாமீனில் வந்த கர்ப்பிணி சாவு - குழந்தை பெற்றதும் உயிரிழந்தார்..!


ஒடிசாவில் ஜாமீனில் வந்த கர்ப்பிணி சாவு - குழந்தை பெற்றதும் உயிரிழந்தார்..!
x

ஒடிசாவில் ஜாமீனில் வந்த கர்ப்பிணி குழந்தை பெற்றதும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோராபுட்,

ஒடிசா மாநிலம் அந்ந்ராகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் சுலபதி (வயது31). 9 மாத கர்ப்பிணி. இவரது கணவர் கூலித்தொழிலாளி. அந்த பகுதியில் இருந்த தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கடந்த டிசம்பர் 26-ந்தேதி, அந்த கிராம பெண்கள் ஒரு போராட்டம் நடத்தினர். அதில் சுலபதியும் கலந்து கொண்டார்.

இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட சுலபதி உள்பட 13 பெண்களை போலீசார் கைது செய்தனர். 16 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமையன்று சுலபதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அன்றைய தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட, ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். புதன்கிழமை இரவில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன்பிறகு சுலபதியின் உடல்நிலை மோசமடைந்ததால் பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

சுலபதியின் உறவுப் பெண் ஒருவர் கூறும்போது, "கர்ப்பிணியான அவர் கைது செய்யப்பட்டதும் ஜாமீன் கோரப்பட்டது. ஆனால் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்ததால் ஜாமீன் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஜாமீன் முயற்சி நடந்து வந்தநிலையில் கடந்த 10-ந்தேதிதான் ஜாமீன் கிடைத்தது. மறுநாள் விடுதலை செய்யப்பட்டார்" என்று கூறினார்.

நிறைமாத கர்ப்பிணியின் மீது கொலை முயற்சி பிரிவில் எப்படி வழக்குப் பதியப்பட்டது, சிறையில் அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டதா? என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story