ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்


ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 19 Nov 2023 11:33 AM GMT (Updated: 19 Nov 2023 11:48 AM GMT)

அகில இந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ஒடிசா செல்கின்றார்.

டெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதில் அவர் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்களின் படி,

ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்வில் நவம்பர் 20-ம் தேதி(நாளை) ஜனாதிபதி கலந்து கொள்கிறார். பின்னர் அதே நாளில், குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை அவர் திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி பஹத்பூர் கிராமத்தில் திறன் பயிற்சி மையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து, பதம்பஹார் ரெயில் நிலையம் செல்லும் அவர், மூன்று ரெயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். புதிய ரைரங்பூர் அஞ்சல் கோட்டம் திறப்பு, ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு அட்டை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து, பதம்பஹார் ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான திட்டப்பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அவர் பதம்பஹாரில் இருந்து ரைரங்பூருக்கு பதம்பஹார்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்கிறார். அன்று மாலை, புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 15வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார்.

பின்னர் நவம்பர் 22 ஆம் தேதி, சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்துள்ள புதிய கல்வி என்ற தேசிய கல்விப் பிரசாரத்தை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி செல்லும் ஜனாதிபதி, அங்கு ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.


Next Story