அத்வானிக்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கே சென்று வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


அத்வானிக்கு பாரத ரத்னா விருது: வீட்டிற்கே சென்று வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 31 March 2024 8:30 AM GMT (Updated: 31 March 2024 11:44 AM GMT)

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை மறக்காமல் கவுரவிப்பது இந்தியாவின் பண்பு. அந்தவகையில், மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், 'பாரத ரத்னா' விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த சமூக சீர்திருத்தவாதியான மறைந்த கர்பூரி தாக்கூர், பா.ஜனதா தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய 96 வயது எல்.கே.அத்வானி, மறைந்த பிரதமர் சவுத்ரி சரண்சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இவர்களில் அத்வானியை தவிர்த்து எஞ்சிய 4 பேருக்கும் நேற்று ஜனாதிபதி மாளிகையில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. விருதுகளை அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story