சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து


சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
x
தினத்தந்தி 23 Aug 2023 5:21 PM GMT (Updated: 23 Aug 2023 5:28 PM GMT)

சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ மற்றும் சந்திரயான் -3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "சந்திராயன்-3 இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம், நமது விஞ்ஞானிகள் புதிய வரலாற்றை உருவாக்கியது மட்டுமல்லாமல், புவியியல் யோசனையையும் மறுஉருவாக்கம் செய்துள்ளனர்..! உண்மையிலேயே இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வானது அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன், மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன் சாதனைகள் மேலும் வரவிருக்கின்றன" என்று அதில் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

முன்னதாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.


Next Story