மேற்கு வங்காளத்தில் முர்மு நேதாஜி, தாகூர் இல்லங்களை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி


மேற்கு வங்காளத்தில் முர்மு நேதாஜி, தாகூர் இல்லங்களை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி
x

2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் இல்லங்களை பார்வையிட்டார்.

நேதாஜி தப்பிச்சென்ற கார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதில் முதல் நிகழ்ச்சியாக விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் குடும்ப வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 10 நிமிடங்களை செலவிட்ட அவர் நேதாஜிக்கு மரியாதை செலுத்தினார். அத்துடன் நேதாஜியின் படுக்கை அறை, படிக்கும் அறை போன்ற இடங்களை சுற்றி பார்த்தார்.

அத்துடன் நேதாஜி தனது வீட்டில் இருந்து 1941-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தப்பிச்செல்வதற்கு பயன்படுத்திய வாண்டரர் கார், இறங்கி சென்ற படிக்கட்டுகள் போன்றவற்றையும் பார்வையிட்டார். அப்போது நேதாஜியின் கொள்ளுப்பேரன் சுமந்திரா போஸ் உடன் இருந்தார்.

ரவீந்திரநாத் தாகூர் வீடு

இது குறித்து ஜனாதிபதி கூறுகையில், 'நேதாஜி பவனை பார்வையிட்டு எனது மேற்கு வங்காள பயணத்தை தொடங்கி இருக்கிறேன். நமது முக்கியமான விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜிக்கு மரியாதை செலுத்தினேன். நேதாஜியின் வீரம் மற்றும் தியாகம் இந்திய தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்' என தெரிவித்தார். பின்னர் ஜோரோசங்கோ தாகூர்பாரியில் உள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டுக்கு திரவுபதி முர்மு சென்றார். அங்கும் சில நிமிடங்களை அவர் செலவிட்டார்.

தாகூரின் இல்லத்தை பார்வையிட்டது குறித்து, 'ரவீந்திரநாத் தாகூர் உலகளாவிய அடையாளமாக திகழ்ந்த புகழ்பெற்ற உறைவிடமான ஜோராசங்கோ தாகூர்பாரிக்கு சென்றது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அவரது வீட்டைப் பார்த்தபோது, புகழ்பெற்ற குடும்பம் நமது கலாசாரத்திற்கு அளித்த செழுமையான பங்களிப்பை அறிந்து கொண்டேன்' என ஜனாதிபதி தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி வரவேற்பு

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மேற்கு வங்காளம் சென்ற திரவுபதி முர்முவை கொல்கத்தா விமான நிலையத்தில் மாநில கவர்னர் ஆனந்த போஸ், மூத்த மந்திரி பிர்காத் ஹக்கிம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவருக்கு முழு அரசு மரியாதையும் வழங்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்கத்தா கிளப் மைதானத்துக்கு சென்ற திரவுபதி முர்முவை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அங்கு வரவேற்றார்.

ஜனாதிபதியின் 2-வது நாள் பயணமான இன்று (செவ்வாய்க்கிழமை) பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக யூகோ வங்கியின் 80-வது ஆண்டு கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்கிறார்.

அத்துடன் ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகத்தையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிடுகிறார். மேலும் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதனுக்கும் அவர் செல்வார் என தெரிகிறது.


Next Story