ஜனாதிபதி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது


ஜனாதிபதி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது
x

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணூம் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையை, தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி மேற்பார்வையிடுகிறார். முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி.மோடி வெளியிடுகிறார். பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும். இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை அவர் அறிவிப்பார்.

தொடர்ந்து 20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், பின்னர் மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதி யார்? என்ற விவரம் மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story