ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு


ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு
x
தினத்தந்தி 21 Jun 2022 10:18 AM GMT (Updated: 21 Jun 2022 10:33 AM GMT)

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது, ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொதுவேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளன. இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக , சரத்பவார், பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரிடம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் களமிறங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை 3 பேரும் நிராகரித்த நிலையில் யஷ்வந்த் சிங்காவை பொதுவேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


Next Story