ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி ஆதரவு


ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி ஆதரவு
x

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு, தங்களது சிவசேனா அணி முழு அளவில் ஆதரவு அளிக்கும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.



புனே,



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள சூழலில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி உத்தவ் தாக்கரே கூறும்போது, பழங்குடியின பெண் ஒருவர் ஜனாதிபதியாக வாய்ப்பு பெறும் வகையில், திரவுபதி முர்முவுக்கு எங்களது ஆதரவை தெரிவிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனை தொடர்ந்து அரசியல் தொடங்கும் என எனக்கு தெரியும். ஆனால், இதில் எந்த அரசியலும் இல்லை. கடந்த காலத்தில் நாங்கள் பிரதீபா பாட்டீலுக்கும் ஆதரவு அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

எனது எம்.பி.க்கள் வற்புறுத்தி, கட்டாயத்தின்பேரில் இந்த முடிவை நான் எடுக்க வேண்டியிருந்தது என்று தகவல்கள் உலா வருகின்றன. இந்த முடிவுக்காக என் மீது எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இதில் எந்தவொரு அரசியல் கோணமும் இருப்பதுபோல் நாங்கள் எண்ணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, தங்களது சிவசேனா அணி முழு அளவில் ஆதரவு அளிக்கும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி ஷிண்டே கூறும்போது, ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம். பிரதமர் மோடி வழிகாட்டுதலின் கீழ் எங்களுடைய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முர்முவுக்கு வாக்களித்திடுவார்கள் என கூறியுள்ளார்.

சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பியது கடந்த மாதத்தில் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.

இதன்பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆகியுள்ளார். திரவுபதி முர்மு ஒடிசாவின் முன்னாள் மந்திரியாகவும் மற்றும் ஜார்க்கண்டின் முன்னாள் கவர்னராகவும் இருந்துள்ளார்.

இந்த தேர்தலில் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி மற்றும் நாட்டின் 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.


Next Story