கலவரத்தால் விலைவாசி இருமடங்கு உயர்வு: மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170
மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170 ஆகவும், கள்ளச்சந்தையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800 ஆகவும் விற்கப்படுகிறது.
இம்பால்,
மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170 ஆகவும், கள்ளச்சந்தையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800 ஆகவும் விற்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு
மணிப்பூரில், பெரும்பான்மையாக இருக்கும் 'மெய்தி' இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு கேட்பதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இது இருதரப்பினரிடையே கலவரமாக வெடித்தது.
70 பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கலவரத்தை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அத்தியாவசிய பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாலும், தாக்குதல் நடக்குமோ என்ற லாரி அதிபர்களின் அச்சத்தாலும் வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகை தடைபட்டது.
பெட்ரோல், கியாஸ் சிலிண்டர்
இதனால், கைவசம் இருந்த பொருட்களின் இருப்பு குறைந்தது. அதன் விளைவாக, அப்பொருட்களின் விலை உயர்ந்தது. அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்று வருகின்றனர்.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110 முதல் ரூ.115 வரை மற்ற மாநிலங்களில் விற்கப்பட்டு வருகிறது. ஆனால், மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.170-க்கு விற்கப்படுகிறது. ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர், கள்ளச்சந்தையில் ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது.
அரிசி மூட்டை விலை, ரூ.900-ல் இருந்து ரூ.1,800 ஆக உயர்ந்து விட்டது. உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து விட்டது.
முட்டை
30 முட்டைகள் கொண்ட பெட்டி, ரூ.180-ல் இருந்து ரூ.300 ஆக அதிகரித்து விட்டது. உருளைக்கிழங்கு விலை, கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இப்பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு பாதுகாப்பு படையினர் காவலாக சென்று வருகிறார்கள். இல்லாவிட்டால், இப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. உள்ளூரிலேயே ஆடு, கோழிகள் கிடைப்பதால், இறைச்சி விலை மட்டும் உயரவில்லை.