ஈசுவரப்பாவுடன் பேசியதன் மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் ஊக்குவிக்கிறார்; ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு
ஈசுவரப்பாவுடன் பேசியதன் மூலம் 40 சதவீத கமிஷனை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
40 சதவீத கமிஷன்
பிரதமர் அலுவலகம் பெரிய தவறு செய்திருக்கிறது. 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மந்திரி பதவியை இழந்த ஈசுவரப்பாவுடன் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அதுவும் சிரித்தபடியே 2 பேரும் பேசியுள்ளனர். இதுதான் இந்தியாவின் வரலாறு. ஈசுவரப்பாவுடன் பிரதமர் பேசி இருப்பதன் மூலம் 40 சதவீத கமிஷனை ஊக்குவிக்கும் விதமாக செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசியல் லாபத்திற்காக எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார். பிரதமர் மோடி தன்னுடன் பேசி இருப்பதை ஈசுவரப்பா உறுதியும் செய்திருக்கிறார். ஒப்பந்ததாரர் சந்தோசிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதால், அவர் தற்கொலை செய்திருந்தார். இதற்கு காரணம் ஈசுவரப்பா தான் என்று சந்தோஷ் குற்றச்சாட்டு கூறி கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
சந்தோஷ் மனைவியுடன் பேசினாரா?
இதுதொடர்பாக வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஈசுவரப்பாவுடன் பிரதமர் மோடி பேசுவது ஏன்?. அவர் ஊழலில் ஈடுபடுவதை பிரதமர் மோடி ஆதரிப்பது தெளிவாகி இருக்கிறது. ஈசுவரப்பாவால் தற்கொலை செய்த சந்தோஷ் மனைவியிடம் பிரதமர் பேசினாரா?. அவரது பெற்றோரிடம் பிரதமர் பேசவில்லை.
சந்தோஷ் வீட்டுக்கு சென்று பிரதமர் ஆறுதலும் கூறவில்லை. பைட்டர் ரவி முன்பாக கைகூப்பி பிரதமர் மோடி நின்றார். இரட்டை என்ஜின் அரசு என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இது இரட்டை மோசடி அரசு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.