புதிய தேர்தல் ஆணையாளரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் நாளை கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையாளராக பதவி வகிக்கும் அனூப் சந்திரா பாண்டேவின் பதவி காலம் வருகிற 14-ந்தேதியுடன் முடிவடைகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.
இந்த சூழலில், இந்திய தேர்தல் ஆணையாளராக பதவி வகிக்கும் அனூப் சந்திரா பாண்டேவின் பதவி காலம் வருகிற 14-ந்தேதியுடன் முடிவடைகிறது. 65 வயது ஆக கூடிய சூழலில், அவர் ஓய்வு பெற உள்ளார்.
இதனால், 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில் காலியிடம் ஒன்று உருவாகும். இந்நிலையில், புதிய தேர்தல் ஆணையாளரை தேர்ந்தெடுப்பதற்கான பிரதமர் தலைமையிலான குழு ஒன்று நாளை கூட இருக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் பிற தேர்தல் ஆணையாளர்கள் (நியமனம், சேவை மற்றும் பதவி காலத்திற்கான நிபந்தனைகள்) சட்டத்தின்படி, சட்ட மந்திரி சார்பில் ஒரு தேடுதல் குழு அமைக்கப்படும்.
அதில், 2 மத்திய செயலாளர்கள் இடம் பெறுவார்கள். அவர்கள், 5 பேரை கொண்ட இறுதி பட்டியலை தயாரிப்பார்கள். இதன்பின்னர். அந்த பட்டியல், பிரதமர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த தேர்வு குழுவில், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய மந்திரி ஒருவர் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஒரு பகுதியாக இருப்பார்கள். இறுதி பட்டியலில் இல்லாத நபர்களையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் இந்த தேர்வு குழுவுக்கு உள்ளது.
இதனை தொடர்ந்து பிரதமர் தலைமையில், நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.