கூட்டணி கட்சி எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி..!
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை பிரதமர் மோடி இன்று முதல் சந்திக்கிறார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு குறைவான காலமே உள்ளதால் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை பகுதி வாரியாக 10 குழுக்களாக பிரித்து அவர்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு செய்தார். கூட்டணி கட்சி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரிக்க பா.ஜனதா தலைவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது 10 குழுக்களாக எம்.பி.க்கள் பிரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் கூட்டணி கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி இன்று முதல் சந்திக்க உள்ளார். அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. மேற்கு உத்தர பிரதேசம், பண்டேல்கண்ட், பிரிஜ் பகுதி எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
2-வது ஆலோசனை கூட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநில கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா கூட்டணி அதற்கான வேலைகளை செய்வதில் மும்முரமாக களம் இறங்கியுள்ளது. பா.ஜனதா தலைமை 160 இடங்களை பலவீனமாக கருதுகிறது. இந்த இடங்களில் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.