பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம்


பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம்
x

பிரதமர் மோடி, கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஒரே நாளில் 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். பெங்களூருவில் அவர் 5 கிலோ மீட்டர் தூரம் திறந்தவாகனத்தில் ஊர்வலம் நடத்தினார். இதில் வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவற்பு அளித்தனர்.

பெங்களூரு:-

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.

தேர்தல் பிரசாரம் தீவிரம்

தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட தலைவர்களும், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி, அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம். இப்ராகிம் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம்

இந்த நிலையில் பிரதமர் மோடி கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று முதல் கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று ஒரே நாளில் 4 இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அதாவது அவர் பீதர் மாவட்டம் உமனாபாத், பெலகாவி மாவட்டம் குடசி, விஜயாப்புராவில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையாடினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியதுடன், கர்நாடகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தனி மெஜாரிட்டியுடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திறந்தவாகனத்தில் ஊர்வலம்

அதைத்தொடர்ந்து பெலகாவியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் அவர் துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கிற்கு வந்தார். அங்கிருந்து மோடி கார் மூலம் பெங்களூருவின் புறவழிச்சாலையான நைஸ் ரோடு சந்திப்புக்கு வந்தார்.

அங்கு குண்டு துளைக்காத திறந்த வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி, ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலத்தில் அவரது வாகனம் மீது சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்கள், பொதுமக்கள் பூமழை பொழிந்தனர். மோடி பயணித்த வாகனத்தின் இருபுறத்திலும் அவரது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி நடந்து வந்தனர். அவர்களின் காவல் கோட்டைக்குள் அந்த வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்தது. இந்த ஊர்வலம் சுமார் மாலை 6.30 மணிக்கு தொடங்கி 7.15 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. பா.ஜனதா தொண்டர்கள் மோடி வாழ்க... மோடி வாழ்க... என்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

இரும்பு தடுப்புகள்

இந்த ஊர்வலம் யஷ்வந்தபுரா, தாசரஹள்ளி, ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. ஆனால் அந்த தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளர்கள் மோடியின் அருகில் நிற்க அனுமதிக்கப்படவில்லை. பிரதமர் மோடி வழக்கம் போல் கோட்டு உடையை அணிந்திருந்தார். தலையில் காவி நிற தொப்பி அணிந்திருந்தார்.

தொண்டர்கள் பா.ஜனதா கொடியை கைகளில் ஏந்தி வழிநெடுகிலும் நின்று பிரதமர் மோடிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ஊர்வலத்தையொட்டி நேற்று மதியம் முதலே அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. தொண்டர்கள் வாகனத்தை நோக்கி பாய்ந்து வருவதை தடுக்கும் நோக்கத்தில் சாலையின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த தடுப்பிற்கு அப்பால் தான் தொண்டர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஆரவாரம் செய்தனர்

இந்த ஊர்வலம் மாகடி ரோடு வழியாக சும்மனஹள்ளியை வந்தடைந்தது. இந்த ஊர்வலம் 5.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. ஊர்வலம் நடைபெற்ற சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்கள், மோடியை பார்த்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். தொண்டர்களை பாா்த்து மோடி சிரித்த முகத்துடன் கைகளை அசைத்தபடி வந்தார்.

ஊர்வலத்தில் டொள்ளு குனிதா, பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்று இருந்தன. ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் சாலையில் தங்களின் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.

தேர்தல் திருவிழா களைக்கட்டியது

இந்த ஊர்வலம் சும்மனஹள்ளியில் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து காரில் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார். நேற்று இரவு அங்கு தங்கிய அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலார், ராமநகர், மண்டியா, மைசூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் மைசூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பின்னர் நாளை மறுநாள் அதாவது 2-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வந்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்துள்ளதால், கர்நாடக சட்டசபை தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ளது.


Related Tags :
Next Story