தனியார் நிறுவன மேலாளர் மர்ம சாவு; கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு


தனியார் நிறுவன மேலாளர் மர்ம சாவு; கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் தனியார் நிறுவன மேலாளர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

பெல்லந்தூர்:

தனியார் நிறுவன மேலாளர்

பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் வசித்து வந்தவர் சுதர்சன் ராவ் (வயது 26). இவர் பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கசுவனஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சுதர்சன் ராவ் வேலை செய்த அலுவலகம் 3 மாடியில் உள்ளது. இந்த நிலையில் சுதர்சன் தரைதளத்தில் இருக்கும் பேக்கரிக்கு சென்று சிகரெட் புகைப்பதை வழக்கமாக வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுதர்சன் சிகரெட் புகைக்க பேக்கரிக்கு சென்று இருந்தார். ஆனால் பேக்கரி உரிமையாளர் வெளியே சென்று இருந்தார். இதனால் பேக்கரி கடை அருகே ஸ்டூடியோ நடத்தி வரும் ராமசந்திர ரெட்டி என்பவர் பேக்கரியை கவனித்து கொண்டு இருந்தார். அப்போது ராமசந்திர ரெட்டியிடம், சுதர்சன் சிகரெட் கேட்டு உள்ளார்.

கொலை என குற்றச்சாட்டு

அப்போது பேக்கரி உரிமையாளர் வந்ததும் சிகரெட் வாங்கி கொள்ளும்படி ராமசந்திர ரெட்டி கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பேக்கரிக்குள் வந்து சுதர்சன் சிகரெட்டை எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதற்கு ராமசந்திர ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சுதர்சன், ராமசந்திர ரெட்டி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் சுதர்சன் அலுவலகத்திற்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் சுதர்சன் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சுதர்சனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் சுதர்சனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் ராமசந்திர ரெட்டி தாக்கியதில் தான் சுதர்சன் உயிரிழந்து விட்டதாகவும், அவர் கொலை செய்ததாகவும் சுதர்சனின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெல்லந்தூர் போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுதர்சன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story