சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு சென்று வழிபட்ட பிரியங்கா காந்தி
இந்திராகாந்தி பாணியில் சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு சென்று வழிபட்ட பிரியங்கா காந்தி மக்களை வெகுவாக கவர்ந்தார்.
சிக்கமகளூரு:-
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு காந்தி குடும்பத்துக்கு முக்கியமான மற்றும் மறக்க முடியாத ஊராகும். ஏனெனில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அரசியலில் மறுவாழ்வு கொடுத்தது சிக்கமகளூரு தான் என்றால் மிகையல்ல.
கடந்த 1978-ம் ஆண்டு சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு இந்திராகாந்தி வெற்றி பெற்றார். சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திராகாந்தி, கடந்த 1978-ம் ஆண்டு சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்த நிலையில் சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு அவரது பேத்தி பிரியங்கா காந்தி சிருங்கேரி சாரதம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
சட்டசபை தேர்தலையொட்டி முதல் முறையாக பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மைசூருவில் பிரசாரம் செய்த அவர், நேற்று காலை சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் உள்ள பிரசித்தி பெற்ற சாரதம்மா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார். இதையடுத்து சிருங்கேரி மடத்துக்கு சென்ற பிரியங்கா காந்தி, மடாதிபதியிடம் ஆசி பெற்றார். பின்னர் கோவிலில் உள்ள இரு யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு கொடுத்து பரிவு காட்டினார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரியங்கா காந்திக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின்போது ராகுல்காந்தி சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்திருந்தார்.
ஆதி சங்கராச்சியார் நிறுவிய மடங்களில் சிருங்கேரி மடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.