குற்றவியல் நீதித் துறையில் இருக்கும் சிரமமான செயல்முறைகள் தான் பெரிய தண்டனைகளாகும் - தலைமை நீதிபதி ரமணா


குற்றவியல் நீதித் துறையில் இருக்கும் சிரமமான செயல்முறைகள் தான் பெரிய தண்டனைகளாகும் - தலைமை நீதிபதி ரமணா
x

ஒரு வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கும்? இதே கேள்வியை நீதிபதிகளாகிய நாங்களும், வெளிநாட்டிற்குச் செல்லும்போது எதிர்கொள்கிறோம்.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 18வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் நீதித்துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து, சட்ட சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன.

இதில் கலந்துகொண்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசுகையில், "இந்த ஆண்டு முதல், தொலைதூர சட்ட சேவை குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்" என்று தெரவித்தார்.

மேலும், "சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில் அடியெடுத்துள்ள போது, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது கவலை அளிப்பதாக அவர் கூறினார். வழக்குகளின் நிலுவைகளைக் குறைப்பதில் நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், வழக்குகள் நிலுவையில் இருப்பது கவலை அளிப்பதாக கூறிய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியது தனது பொறுப்பு என்று தலைமை நீதிபதி கூறினார்.

"குற்றவியல் துறை நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க, ஒரு முழுமையான செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஒரு வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கும்? இதே கேள்வியை நீதிபதிகளாகிய நாங்களும், வெளிநாட்டிற்குச் செல்லும்போது எதிர்கொள்கிறோம்.

வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். அதை நான் விரிவாகக் கூற வேண்டியதில்லை. கடந்த முறை நடந்த தலைமை நீதிபதிகள் மாநாட்டில் இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். நீதிபதி காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தாததும் முக்கிய காரணம் என உங்கள் அனைவருக்கும் தெரியும்.

விசாரணைக் கைதிகளை நீண்ட காலம் சிறையில் அடைக்க வழிவகுத்த செயல்முறை குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நமது குற்றவியல் நீதி அமைப்பில் இருக்கின்ற "செயல்முறை அல்லது நடைமுறை" தான் தண்டனையாக விளங்குகிறது எனலாம். அவசரமான, கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள் தொடங்கி, ஜாமீன் பெறுவதில் உள்ள சிரமமான செயல்முறை வரை, இத்தகைய செயல்முறை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதில் நீதித்துறை எப்போதும் முன்னோடியாக உள்ளது. எனது ஒரே வேண்டுகோள், காலியிடங்களை நிரப்புவதுடன், உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்" என்று தலைமை நீதிபதி கூறினார்.


Next Story