ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய பாடநூல்களை ரத்து செய்ய கோரி நடந்த போராட்டத்தில் தேவேகவுடா, டி.கே.சிவக்குமார் கூட்டாக பங்கேற்பு


ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய பாடநூல்களை ரத்து செய்ய கோரி நடந்த போராட்டத்தில் தேவேகவுடா, டி.கே.சிவக்குமார் கூட்டாக பங்கேற்பு
x

ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய கர்நாடக பாடநூல்களை ரத்து செய்ய கோரி நடந்த போராட்டத்தில் தேவேகவுடாவும், டி.கே.சிவக்குமாரும் கூட்டாக பங்கேற்றனர். மேடையிலேயே பாடநூலை கழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு

ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய கர்நாடக பாடநூல்களை ரத்து செய்ய கோரி நடந்த போராட்டத்தில் தேவேகவுடாவும், டி.கே.சிவக்குமாரும் கூட்டாக பங்கேற்றனர். மேடையிலேயே பாடநூலை கழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

கர்நாடக பாடநூல் கழக தலைவராக இருந்தவர் ரோகித் சக்ரதீர்த்த. இவர், உருவாக்கிய பாடநூல்களில் குவெம்பு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பற்றிய கருத்துகள் கைவிடப்பட்டு இருந்தது. சில தலைவர்கள் பற்றி சர்ச்சை கருத்துகளும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பேசிய கருத்துகள் பாடநூலில் இடம் பெற்றிருந்தது. இதற்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான பாடநூல் குழுவை கலைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனாலும் ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய பாடநூல்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்று அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, ரோகித் சக்ரதீர்த்தவுக்கு எதிராக கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு சுதந்திர பூங்காவில் ரோகித் சக்ரதீர்த்தவுக்கு எதிராகவும், அவர் உருவாக்கிய பாடநூல்களை ரத்து செய்ய கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்டாக பங்கேற்பு

இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கூட்டாக பங்கேற்றனர். மாநிலங்களவை தேர்தலில் 2 கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் உருவானதுடன், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க மறுத்திருந்தது. இதனால் காங்கிரஸ் மீது தேவேகவுடா அதிருப்தியில் இருந்த நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருடன் அவர் போராட்டத்தில் பங்கேற்று இருந்தார். இந்த போராட்டத்தின் போது மேடையில் நின்று பேசிய டி.கே.சிவக்குமார், திடீரென்று ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய பாடநூலை கிழித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

பின்னர் டி.கே.சிவக்குமார் பேசும் போது, 'கர்நாடகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் அவமதிக்கும் வகையில் பாடநுல்களை ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கி இருக்கிறார். அவருக்கு எதிராக பல போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரோகித் சக்ரதீர்த்தவை கைது செய்ய வேண்டும். அவர் உருவாக்கிய பாடநூல்கள் இன்னும் 12 நாட்கள் தான் இருக்கும். இந்த ஆட்சி போன பின்பு, வேறு கட்சி ஆட்சிக்கு வரும். அப்போது ரோகித் சக்ரதீர்த்த உருவாக்கிய அனைத்து பாடநூல்களும் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படும்', என்றார்.

காவிமயமாக்க முயற்சி

முன்னதாக தேவேகவுடா பேசும் போது, 'கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் மாணவ-மாணவிகள் படிக்கும் பாடப்புத்தகத்தை காவிமயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. குவெம்பு மட்டும் இல்லை, இன்னும் பல தலைவர்களை ரோகித் சக்ரதீர்த்த அவமதித்துள்ளார்.

ரோகித் சக்ரதீர்த்தவை இன்னும் தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பற்றி பாடப்புத்தகங்களில் இருப்பதையும் நீக்க வேண்டும்', என்றார்.


Next Story