உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ சம்பவத்தை கண்டித்து போராட்டம்


உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ சம்பவத்தை கண்டித்து போராட்டம்
x

மைசூருவில் மணிப்பூர் கலவரம், உடுப்பி மாணவி ஆபாச வீடியோ சம்பவத்தை கண்டித்து பழங்குடியினர் அமைப்பினர் மற்றும் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு:

மைசூருவில் மணிப்பூர் கலவரம், உடுப்பி மாணவி ஆபாச வீடியோ சம்பவத்தை கண்டித்து பழங்குடியினர் அமைப்பினர் மற்றும் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூர், உடுப்பி சம்பவம்

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவம் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. இந்தநிலையில் உடுப்பி பாராமெடிக்கல் கல்லூரி கழிவறையில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் தேசிய அளவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியும், உடுப்பி மாணவி ஆபாச வீடியோ வழக்கை கண்டித்து பா.ஜனதாவும் போட்டி போட்டு போராட்டம் நடத்தி வருகிறது.

ஆபாச வீடியோ விவகாரம்

அதன்படி உடுப்பி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்ட சம்பவத்தை கண்டித்து, மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜனதா மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடுப்பி கல்லூரியில் மாணவியை ஆபாசமாக படம்பிடித்த சக மாணவிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது மட்டும் போதாது.

அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த மாணவிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அதே நேரம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து அந்த மாணவி அதே கல்லூரியில் படித்தால், சக மாணவர்களால் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே வேறு கல்லூரியில் படிப்பதற்கு மாநில அரசு உதவி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியிடம் உடுப்பி கல்லூரி விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தனர். அந்த மனுவை வாங்கி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம்

இதேபோல மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பலாத்காரத்தை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பழங்குடியின ஆதிவாசி அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், மணிப்பூரில் நடந்த வன்முறை, கலவரத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். இந்த கலவரத்தை ஆதாரமாக வைத்து அந்த மாநில கவர்னர், மணிப்பூர் அரசை கலைக்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். இதுவரை அவர்கள் இழந்த சொத்துகளுக்கு சரியான நிவாரணம் வழங்கவேண்டும். அதேபோல கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சரியான தண்டனை கிடைக்க செய்யவேண்டும் என்று கூறினர்.

மேலும் இது தொடர்பாக பழங்குடியினர் அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவை வாங்கிய கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story