அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்து பெண்கள் போராட்டம்


அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்து பெண்கள் போராட்டம்
x

கோலார் தங்கவயலில் அரசு பஸ்சில் பயணித்த பெண்கள் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் தங்கவயல்:-

அரசு திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அதே போல வீடுகளில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதனால் மாநிலத்தில் பல இடங்களில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் மின்சாரத்துறையை சேர்ந்த ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை முன் வைத்து, பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். நேற்று கோலார் தங்கவயல் பகுதியில் இதேபோல பெண்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் போராட்டம்

கோலார் தங்கவயலை அடுத்த ராபர்ட்சன்பேட்டை நகரசபை பஸ் நிலையத்தில் இருந்து கோலாருக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பயணித்தனர். அவர்கள் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த கண்டெக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். ஆனால் அதற்கு பெண்கள் மறுப்பு தெரிவித்ததுடன், பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கண்டெக்டர்கள் மற்றும் டிரைவர்கள், பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், அரசு பஸ்களில் இலவச பணம் செய்யும் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியது. அதன்படி காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்துவிட்டது. எனவே நாங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறினர். இதை கேட்ட கண்டெக்டர் மற்றும் டிரைவர்கள், அவர்களை சமாதானம் செய்து, பஸ்சில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து துறை ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


Next Story