மத்திய அரசை கண்டித்து 20-ந் தேதி போராட்டம்


மத்திய அரசை கண்டித்து 20-ந் தேதி போராட்டம்
x

அன்ன பாக்கிய திட்டத்திற்கு அரிசி ஒதுக்க மத்திய அரசு மறுத்ததை கண்டித்து வருகிற 20-ந்தேதி கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுவதாக ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பெங்களூரு:-

10 கிலோ அரிசி வழங்கும் திட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி, 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்தது. அதில் ஒன்றான அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ்(பி.பி.எல்.) உள்ள குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5 கிலோ இலவச அரிசியை 10 கிலோவாக அதிகரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு, தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவித்தது.

இதற்காக இந்திய உணவு கழகத்திடம் கர்நாடகத்திற்கு கூடுதல் அரிசி வழங்குமாறு கோரி மாநில அரசு கடந்த

12-ந் தேதி கடிதம் எழுதியது. அதற்கு பதிலளித்த இந்திய உணவு கழகம், கர்நாடக அரசுக்கு தேவையான அரிசி வழங்குவதாக கடிதம் மூலம் தெரிவித்தது. இந்த கடிதம் வந்த மறுநாளே, மீண்டும் ஒரு கடிதம் எழுதிய இந்திய உணவு கழகம், மாநில அரசுக்கு அரிசி வழங்கப்படாது என்று கூறியது. இதனால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்தது.

பா.ஜனதா எச்சரிக்கை

இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டி, இந்திய உணவு கழகம் முதலில் அரிசி வழங்குவதாக கூறிவிட்டு மறுநாளே அரிசி இல்லை என்று கூறியுள்ளது. கர்நாடக அரசுக்கு அரிசி ஒதுக்குவதில் மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள பா.ஜனதா தலைவர்கள், இதில் பா.ஜனதா எந்த அரசியலும் செய்யவில்லை என்றும், மத்திய அரசை கேட்டு இந்த திட்டத்தை காங்கிரஸ் அறிவித்ததா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். திட்டமிட்டபடி வருகிற 1-ந் தேதி பி.பி.எல்.

மற்றும் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றும் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டம் நடத்தப்படும்

இந்த நிலையில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு கூடுதல் அரிசி ஒதுக்க மறுப்பதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 20-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு(பி.பி.எல். மற்றும் அந்தியோதயா) தலா 10 கிலோ இலவச அரிசி வழங்க மாநில அரசு தயாராக உள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா வினர் குறை கூறி இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளோம். 2-வது மந்திரிசபை கூட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்குவதற்கான தேதியை அறிவித்தோம்.

கவலைப்படுவது இல்லை

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பற்றி நாங்கள் கவவைப்படுவது இல்லை. தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜனதா தோற்றால் கர்நாடகத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காது என்று கூறினார். தற்போது கர்நாடகத்திற்கு அரிசி வழங்குவதை ரத்து செய்திருப்பதன் மூலம் அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.

கர்நாடகத்தில் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற நோக்கத்தில் முன்பு காங்கிரஸ் அரசு அன்ன பாக்ய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை வருகிற 1-ந் தேதி அமல்படுத்த முடிவு செய்தோம். இதற்காக இந்திய உணவு கழகத்திற்கு கூடுதல் அரிசி ஒதுக்குமாறு கோரி மாநில அரசு கடந்த 12-ந் தேதி கடிதம் எழுதியது.

பா.ஜனதாவின் விரோத அரசியல்

ஜூலையில் மின்னணு ஏலம் மூலம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 425 டன் அரிசி வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதியளித்தது. ஆனால் இந்த கடிதம் எழுதிய மறுநாளே, அதாவது 13-ந் தேதியே அந்த நிறுவனம் மீண்டும் ஒரு கடிதம் எழுதி, அரிசி மற்றும் கோதுமையை திறந்த வெளியில் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளோம் என்று கூறியது. பா.ஜனதாவின் விரோத அரசியலுக்கு இது சாட்சி.

காங்கிரசுக்கு வாக்காளித்த வாக்காளர்களை பா.ஜனதா எதிர்க்கிறது. பா.ஜனதா ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது. மத்திய அரசின் இந்த துரோக செயலை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 20-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு அரிசியை ஒதுக்காவிட்டாலும், நாங்கள் திட்டமிட்டப்படி ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவோம்.

எடுத்துக் கூறுவோம்

மத்திய அரசிடம் 7 லட்சம் டன் அரிசி கையிருப்பு உள்ளது. அதில் நாங்கள் 2.85 லட்சம் டன் அரிசி தான் கேட்டோம். இதுகுறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவோம். அதிக நெல் சாகுபடி செய்யும் மாநிலங்களை தொடர்பு கொண்டுள்ளோம். அதனால் கர்நாடகத்திற்கு தேவையான அரிசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story