தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்


தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்
x

தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.

பெரும்பாவூர்,

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஒரு மாவட்டத்தில் கூட இந்த நோய் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அத்துடன் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை.

இந்த நோய் மூலம் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும், மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட இது காரணமாகும் என்பது உண்மையே. ஆகவே பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

மேலும் இந்த நோய் 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை மட்டுமே தாக்குவதால் குழந்தைகள் பாதுகாப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். இந்த நோய் தோன்றுவதாக ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

அதில் உதாசீனம் கூடாது. குழந்தைகளுக்கு இந்த நோய் பரவாமல் இருக்க நோய்வாய்பட்டவர்களை தனிமைப்படுத்துதலும், டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் உடனடியாக உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதும், குழந்தைகளுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வழங்குவதும் முக்கியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story