சட்டசபைக்கு ரூ.10½ லட்சத்துடன் வந்த பொதுப்பணித்துறை என்ஜினீயரால் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டசபை வளாகத்துக்குள் அங்குள்ள மேற்கு நுழைவு வாயில் வழியாக ஒருவர் வந்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டசபை வளாகத்துக்குள் அங்குள்ள மேற்கு நுழைவு வாயில் வழியாக ஒருவர் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர்.
அப்போது, அவர் கொண்டு வந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதில் மொத்தம் ரூ.10½ லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் ஜெகதீஸ் என்பதும், மண்டியாவில் பொதுப்பணித்துறை என்ஜினீயராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
ஆனால் விதானசவுதாவுக்கு ரூ.10½ லட்சத்தை எதற்காக எடுத்து வந்தார்?, அவர் யாரை சந்திக்க வந்தார்?, அந்த பணத்தை மக்கள் பிரதிநிதிகள் அல்லது உயர் அதிகாரிகள் யாருக்கும் லஞ்சமாக கொடுக்க வந்தாரா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. ரூ.10½ லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.