பி.யூ.சி. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்


பி.யூ.சி. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

7.26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை எழுதும் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து தேர்வு மையத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

7.26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை எழுதும் மாணவிகள் 'ஹிஜாப்' அணிந்து தேர்வு மையத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னட தேர்வு

கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு என்று சொல்லக்கூடிய பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த கல்வி ஆண்டுக்கான பி.யூ.சி. 2-ம் ஆண்டுபொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் கன்னட மொழி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது.

இந்த தேர்வை 7 லட்சத்து 26 ஆயிரத்து 195 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். கர்நாடகத்தில் 5 ஆயிரத்து 716 பி.யூ.கல்லூரிகளின் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 1,109 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு குழுக்கள்

மாணவர்கள் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது மாவட்ட அளவில் 64 கண்காணிப்பு குழுக்களும், தாலுகா அளவில் 525 குழுக்களும், 2 ஆயிரத்து 373 சிறப்பு குழுக்களும் சோதனையில் ஈடுபட உள்ளன.

கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள மாவட்ட கருவூலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

செல்போனுக்கு தடை

மேலும், பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்வித்தாள் குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள் எடுத்து செல்லும்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

'ஹிஜாப்' அணிந்து வர தடை

மேலும் முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி கேட்டு பி.யூ.சி. முதல்வர்களிடம் கடிதம் ெகாடுத்தனர். ஆனால் கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ், வகுப்பறையிலும், தேர்வு எழுதும் அறையிலும் யாரும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வரக்கூடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தால் அனுமதி கிடையாதும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.யூ.சி. பொதுத்தேர்வில் முதல்நாளான இன்று கன்னட பாட தேர்வை தொடர்ந்து 11-ந் தேதி (சனிக்கிழமை) கணிதம், 13-ந் தேதி (திங்கட்கிழமை) பொருளாதாரம், 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேதியியல், 15-ந் தேதி (புதன்கிழமை) தமிழ் உள்ளிட்ட மொழி தேர்வு, 18-ந் தேதி (சனிக்கிழமை) உயிரியல், 20-ந் தேதி (திங்கட்கிழமை) இயற்பியல், வரலாறு, 23-ந் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம், 27-ந் தேதி (திங்கட்கிழமை) கணக்கு பதிவியல், 29-ந் தேதி (புதன்கிழமை) கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை தேர்தல்

இந்த தேர்வுகள் முடிந்த பிறகு அனேகமாக கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story