பஞ்சாப்-காஷ்மீர் போதை பொருள் கடத்தலுக்கான புதிய வழி; ஐ.ஜி. பேச்சு
பஞ்சாப் போலீசார் பல கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயினை கைப்பற்றிய நிலையில், பஞ்சாப்-காஷ்மீர் போதை பொருள் கடத்தலுக்கான புதிய வழியாகி விட்டது என ஐ.ஜி. கூறியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் 2 வாகனங்களில் தனியாக, மறைத்து வைத்து கடத்தப்பட்ட ஹெராயின் வகை போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 16 கிலோ எடை கொண்ட அவை 16 பொட்டலங்களாக எடுத்து செல்லப்பட்டு உள்ளன.
இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்த கடத்தலுக்காக தேசிய நெடுஞ்சாலையை (ஜம்முவில் இருந்து பஞ்சாப் செல்லும் வழி) பயன்படுத்தி உள்ளனர்.
அவர்கள் 4 பேரும் மன்ஜீந்தர் சிங் என்ற மன்னா (வயது 28), குர்தீத் சிங் என்ற கிட்டா (வயது 35), போலா சிங் (வயது 32) (3 பேரும் தார்ன்தரனில் உள்ள சீமா கலன் கிராமத்தில் வசிப்பவர்கள்) மற்றும் குல்தீப் சிங் என்ற கிவி என்ற கீப்பா (வயது 32) (தார்ன்தரனின் காஜிகோட் சாலை பகுதியை சேர்ந்த நபர்) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி ஐ.ஜி. மொனீஷ் சாவ்லா கூறும்போது, பஞ்சாப் போலீசார் பல கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த நிலையில், பஞ்சாப்புக்கு போதை பொருட்களை கடத்துவதற்கான புதிய வழியாக காஷ்மீர் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.
இந்த கடத்தலின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட மல்கீத் சிங் என்ற தார்ன்தரனின் சீமா கலன் பகுதியை சேர்ந்த நபர் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது. அவர், 16 கிலோ போதை பொருட்களை வாங்கி வரும்படி அவரது 4 கூட்டாளிகளை ஜம்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார். மல்கீத், இதற்கு முன்பு இதே பாணியில் 5 முறை கடத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் மீது 3 வழக்குகள் உள்ளன என கூறியுள்ளார்.