அம்ரித்பால் சிங்குக்கு 6 மணி நேரம் அடைக்கலம் கொடுத்த பாட்டியாலா பெண் கைது


அம்ரித்பால் சிங்குக்கு 6 மணி நேரம் அடைக்கலம் கொடுத்த பாட்டியாலா பெண் கைது
x

அம்ரித்பால் சிங்குக்கு 6 மணி நேரம் அடைக்கலம் கொடுத்த பாட்டியாலா பெண்ணை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சண்டிகர்,

வாரீஸ் பஞ்சாப் டே அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க கோரி பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு அம்ரித்பாலை கைது செய்ய தீவிரப்படுத்தப்பட்டது. நேபாளம் வழியாக அவர் தப்பிச் செல்லலாம் என உளவு அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து நேபாள எல்லைப் பகுதிகள் உஷார் நிலையில் உள்ளன.

அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள சிசிடிவிகளில் சிக்கியுள்ளார். ஒரு சிசிடிவி காட்சியில், அவர் ஒரு தெருவில் நடந்து செல்லும்போது சன்கிளாஸ் அணிந்து தொலைபேசியில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பின்னர் அம்ரித்பால் சிங் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

இந்த வழக்கில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளருக்கு அடைக்கலம் கொடுத்ததாக பாட்டியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 19-ந்தேதி பாட்டியாலா ஹர்கோபிந்த் நகரைச் சேர்ந்த பல்பீர் கவுர் என்ற பெண் அவரது இடத்தில் அம்ரித்பால் மற்றும் அவரது உதவியாளர் பப்பல்பிரீத் சிங் இருவருக்கும் சுமார் 6 மணிநேரம் அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஷஹாபாத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பல்பீர் கவுரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்ரித்பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நடைபெறும் இரண்டாவது கைது இது. முன்னதாக, தேஜிந்தர் சிங் கில் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 212 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story