தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக கிராம சாலைகள் - மத்திய மந்திரி வலியுறுத்தல்


தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக கிராம சாலைகள் - மத்திய மந்திரி வலியுறுத்தல்
x

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக கிராமப்புற சாலைகள் அமைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

'கிராமப்புற சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான முயற்சிகள்' என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி கிரிராஜ் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'கிராமப்புற சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு கி.மீ.க்கு 10 முதல் 15 சதவீதம் வரை செலவு குறைகிறது.

அதேநேரம், தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்துக்கு இணையாக கிராமப்புற சாலைகள் அமைக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சாலைகள்தான் நமது கிராமங்களின் உயிர்நாடிகள் என்பதை நாம் உணர வேண்டும்' என்றார்.

அவரது கருத்துகளை பிரதிபலித்த மத்திய பஞ்சாயத்து ராஜ் ராஜாங்க மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல், 'கிராமப்புற சாலைகளில் பயணிகள் பயணிப்பது, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வது போல வசதியாக இருக்க வேண்டும்' என்றார். 'கிராமப்புற சாலைகள், கிராம மக்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலுகின்றன' என ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் நாகேந்தர்நாத் சின்கா தெரிவித்தார்.


Next Story