'குர் ஆன் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்' கர்நாடகாவில் இந்து அமைப்பு தலைவர் பேச்சால் சர்ச்சை
கர்நாடகாவில் ’ஜகரன் வேதிகே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் கேஷவ் மூர்த்தி மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் 'ஜகரன் வேதிகே' என்ற இந்து அமைப்பின் தலைவர் கேஷவ் மூர்த்தி மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நுபுர் சர்மாவின் கருத்தை தனது சமூக வலைத்ததளத்தில் பகிர்ந்ததாக ராஜஸ்தானின் உதய்பூர் நகரை சேரந்த தையல் கடைக்காரர் கன்னையா லால் கொடூரமாக இரண்டு முஸ்லீம் நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பரவலாக இதற்கு கண்டனக் குரல்களும் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி கேஷவ் மூர்த்தி தலைமையில் கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பேசிய கேஷவ் மூர்த்தி, " மக்களை கொல்ல வேண்டும் என்று குர் ஆன் சொல்கிறது. எனவே, குர் ஆன் வாசிப்பர்கள் அதை பின்பற்ற மாட்டார்கள் என ஏன் நாம் நினைக்கக் கூடாது? குர் ஆன் வாசிப்பர்கள் பயங்கரவாதிகள்" என கடுமையாக பேசினார்.
மேற்கூறிய சர்ச்சை பேச்சு தொடர்பாக இஸ்லாமிய அமைப்பான ஜாமீர் அகமது என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கேஷவ் மூர்த்தி மீது, இரு பிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல் (153 ஏ), கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் பேசுதல்(153 பி) மத உணர்வுகளை புண்படுத்துதல் (295ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.