நேஷனல் ஹெரால்டு வழக்கு : அமலாக்கத்துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரிய ராகுல் காந்தி


நேஷனல் ஹெரால்டு வழக்கு : அமலாக்கத்துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரிய ராகுல் காந்தி
x

Image Courtesy : AFP 

வெளிநாட்டில் இருப்பதால் அமலாக்கத்துறை முன் ஆஜராக ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை யங் இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு என சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது. அதில் ஜூன் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில் ராகுல் காந்தியை இன்று (ஜூன் 2) விசாரணையில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருப்பதால் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராக ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார். ஜூன் 5 ஆம் தேதிக்கு பிறகு ஒரு தேதியை அறிவிக்குமாறு ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார். ராகுல் காந்தி அவகாசம் கோரி உள்ளதால் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Next Story