லடாக்: ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்
லடாக் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லே,
லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மற்ற வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "ஏஎல்எஸ் (அசோக் லேலண்ட் ஸ்டாலியன்) வாகனம், லேயிலிருந்து நியோமாவுக்குச் செல்லும் வாகனத்தின் ஒரு பகுதியாக, கியாரிக்கு ஏழு கிமீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் சுமார் 5:45-6 மணியளவில் சறுக்கியது. அந்த வாகனத்தில் 10 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் லடாக் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "லடாக்கில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் நமது வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
அனைத்து தியாகிகளுக்கும் எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்." என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.