தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது - ராகுல்காந்தி ஆவேசம்


தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது - ராகுல்காந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 25 March 2023 7:53 AM GMT (Updated: 25 March 2023 8:37 AM GMT)

மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்; ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன் என ராகுல்காந்தி கூறினார்

புதுடெல்லி

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனது எம்.பி.பதவி தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை நீக்கப்பட்டது, பின்னர் மக்களவை சபாநாயகருக்கு விரிவான பதில் எழுதினேன். நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக சில மந்திரிகள் என்னைப் பற்றி பொய் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.

* இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அதற்கான உதாரணங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.

* நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?அவர்கள் என் குரலை அடக்கி, என்னை ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தலாம் என்று நினைத்தால், அவர்களால் அதைச் செய்ய முடியாது.நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன்.

* அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன்.

* அதானி குறித்த எனது பேச்சுக்கு பிரதமர் பயப்படுகிறார், அதை நான் அவரது கண்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தான், முதலில் இந்த தகுதி நீக்கம்.

* அதானி ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது யார் என்பது எனது முக்கிய கேள்வி.இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்பேன்.

* எனக்கு உண்மையைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன், அது என் வேலை, நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது கைது செய்யப்பட்டாலும் அதைத் தொடர்ந்து செய்வேன். இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, அதனால்தான் இதைச் செய்கிறேன்.


Next Story