எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா?


எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா?
x

எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி,

எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை, கோர்ட்டு தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது.இதில் ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை காலமான 2 ஆண்டுகள் மட்டுமல்ல, தண்டனைக்காலம் முடிந்து 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் தகுதி நீக்க காலம் ஆகும்.

இந்த 8 ஆண்டு காலத்தில் அவர் தேர்தலில் நிற்க முடியாது என்று அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராகுல் காந்தி சட்ட நிவாரணம் தேடலாம். முதலில் அவர் தனது தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும். அப்பீல் செய்கிறபோது, அங்கு அவருடைய தண்டனையை நிறுத்தி வைப்பதுடன், தீர்ப்புக்கும் தடை விதிக்க வேண்டும். இது நேர்ந்தால் பதவி பறிப்பும் நிறுத்தி வைக்கப்படும் என அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

தகுதி நீக்கம் செய்ததை நாடாளுமன்ற செயலகம் நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும். ஏற்கனவே லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பி.பி. முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கவரட்டி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.அந்தத் தீர்ப்பை அடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.அவர் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். கேரள ஐகோர்ட்டு அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்புக்கும் தடை விதித்துள்ளது.ஆனால், தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. இதை அவரே தெரிவித்துள்ளார்.எனவே ராகுலுக்கு கோர்ட்டில் நிவாரணம் கிடைத்தாலும், இதில் இறுதி முடிவு என்பது நாடாளுமன்ற மக்களவை செயலகத்தின் கையில் தான் உள்ளது.

1 More update

Next Story