ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்படும்...?


ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்படும்...?
x

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், டெல்லி துக்ளக் லேன் 12 ல் இருக்கும் பங்களா வீடு அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம் கோலாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி பேசியது சர்ச்சை ஆனது. அவர் பிரதமர் மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சித்தார். ''திருடர்கள் எல்லாம் மோடி என்ற பெயரையே வைத்திருப்பது ஏன்?'' என்று பேசினார்.

அவர் மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார்.அதில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த மார்ச் 23-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மறுநாள், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இதற்கிடையே, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த 4-ந் தேதி நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு, மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்க உத்தரவை மக்களவை செயலகம் நேற்று திரும்ப பெற்றது.இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், ''சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கருத்தில்கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8-வது பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்க உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம் வாபஸ் பெறப்பட்டதால் மீண்டும் அவர் எம்.பி.யானார். நேற்று அவர் அவை நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இன்றும் அவை நடவடிக்கையில் பங்கேற்று இருக்கிறார்.

இதனிடையே, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் 20 ஆண்டுகளாக அவர் வசித்து வந்த டெல்லி 12, துக்ளக் லேனில் உள்ள பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இதை ஏற்று ராகுல் காந்தியும் காலி செய்தார். இந்த நிலையில், மீண்டும் ராகுல் காந்திக்கு இதே பங்களா ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story