கிராமப்புற வேலை திட்ட பணியாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்; கைகளை இழந்த பெண் காலால் எழுதியதை வியந்து பாராட்டினார்


கிராமப்புற வேலை திட்ட பணியாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்; கைகளை இழந்த பெண் காலால் எழுதியதை வியந்து பாராட்டினார்
x

கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரையின்போது, கிராமப்புற வேலை உறுதி திட்ட பணியாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

பெங்களூரு:

பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்தது. அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது.

கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாட்டம் குண்டலுபேட்டையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்கள் வழியாக சித்ரதுர்கா மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை சித்ரதுர்கா மாவட்டம் ஹர்திகோட்டே கிராமத்தில் நிறைவு செய்தார்.

சோனியா காந்தி

மண்டியா மாவட்டத்தில் பாதயாத்திரை நடைபெற்றபோது, கடந்த 6-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்து கொண்டு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தார். அவர் பங்கேற்ற இந்த நடைபயணம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ஒட்டுமொத்தமாக 34-வது மற்றும் கர்நாடகத்தில் 10-வது நாள் பாதயாத்திரையை ஹர்திகோட்டே கிராமத்தில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கினார்.

14 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் நீடித்த நிலையில் சேனிகெரே கிராமத்தில் ராகுல் காந்தி காலை 11 மணிக்கு தனது காலை நேர பாதயாத்திரையை நிறைவு செய்தார். 5 மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு மாலை 4 மணிக்கு சேனிகெரே கிராமத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய அவர், சித்ரதுர்கா சித்தாபுரா சாம்ராட்நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார்.

செல்போனில் படம் எடுத்தார்

அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், பின்னர் பாதயாத்திரையை தொடங்கி 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சித்தாபுராவில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார். நேற்று அவர் 25 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தி சித்தாபுராவில் தங்கினார். இன்று அவர் தனது 11-வது நாள் பாதயாத்திரையை சித்தாபுராவில் இருந்து தொடங்குகிறார்.

பாதயாத்திரையின்போது, ராகுல் காந்தி விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், கூலித்தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவா்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது, இரு கைகளையும் இழந்த ஒரு பெண் தனது கால் விரல்களில் பேனாவை வைத்து எழுதினார். இதை பார்த்து வியந்த ராகுல் காந்தி தனது செல்போனில் படம் எடுத்தார்.

கலந்துரையாடினார்

மேலும் அந்த பெண்ணை அவர் வெகுவாக பாராட்டினார். மேலும் ஆஷா ஊழியர்கள், கிராமப்புற வேலை உறுதி திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார மையங்களில் பணியாற்றும் செவிலியர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதாக அவர் உறுதியளித்தார்.


Next Story