உணவு இடைவேளைக்கு பிறகு ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை
உணவு இடைவேளைக்குப் பிறகு ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்கினர்
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் முறைகேடு பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜரானார்
மூன்றரை மணி நேரம் விசாரணை முடிந்ததும் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் சோனியா காந்தியை இருவரும் சந்தித்தனர். பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின், அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி மீண்டும் ஆஜரானார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அவரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போராட்டம் நடத்திய காங்கிரஸ்,
முன்னதாக அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தடையை மீறி ஏராளமானோர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்க வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார் இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மத்திய அரசுக்கு எதிரான கட்சித் தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவுடன் ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்குச் சென்றார். ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர் உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரி கேள்விகளை கேட்டார். விசாரணைக்கு முன்பு, சொல்வதெல்லாம் உண்மை என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார் ராகுல் காந்தி. விசாரணைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்
'நேஷனல் ஹெரால்டு' வழக்கு
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடங்கினார். அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் அந்தச் செய்தித்தாளை அச்சிட்டு வந்தது. அந்த நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோரை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியது.
அதன் இயக்குநர்கள் இருவரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு நிதியுதவி அளித்து பிறகு அந்த நிறுவனத்தை யங் இந்தியா கையகப்படுத்தியதில் முறைகேடும், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையும் நடைபெற்றதாகவும், இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுலுக்கு தொடர்பிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.