வயநாட்டில் ராகுல் காந்தி தோற்பது உறுதி: பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரன்


வயநாட்டில்  ராகுல் காந்தி தோற்பது உறுதி: பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரன்
x

ராகுல் காந்திக்கு 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் கிடைத்த முடிவுதான் வயநாடு தொகுதியில் இந்த முறை கிடைக்கும் என பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் கூறியுள்ளார்.

வயநாடு,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். அதேநேரம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இதைத்தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுகிறார். அங்கு அவரது வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை கட்சித்தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. வயநாடு தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெறும் 7.25 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஆனால் இந்த முறை வயநாடு தொகுதி தங்களுக்கு கிடைக்கும் எனவும், ராகுல் காந்திக்கு சென்றமுறை அமேதி தொகுதியில் கிடைத்த முடிவு (தோல்வி) தான் இந்த முறை வயநாட்டில் கிடைக்கும் என்றும் சுரேந்திரன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


Next Story