சுப்ரீம் கோர்ட்டில் 2 முறை மன்னிப்பு கேட்டவர் ராகுல் காந்தி: வீர சாவர்க்கரின் பேரன்


சுப்ரீம் கோர்ட்டில் 2 முறை மன்னிப்பு கேட்டவர் ராகுல் காந்தி: வீர சாவர்க்கரின் பேரன்
x
தினத்தந்தி 27 March 2023 11:25 AM GMT (Updated: 27 March 2023 11:46 AM GMT)

ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை என கூறிய நிலையில், அவர் சுப்ரீம் கோர்ட்டில் 2 முறை மன்னிப்பு கேட்டவர் என்று வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை. நான் காந்தி என்று பேசினார்.

இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ராகுல் காந்தி கூறும்போது அவர் சாவர்க்கர் இல்லை என்றும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டும்படி அவருக்கு நான் சவால் விடுகிறேன். இதற்கு நேர்மாறாக, சுப்ரீம் கோர்ட்டில் 2 முறை மன்னிப்பு கேட்டவர் ராகுல் காந்தி.

அவர் செய்வது எல்லாம் குழந்தைத்தனம் போன்று உள்ளது. அரசியலில் முன்னேற வேண்டும் என்பதற்காக, தேசப்பற்றாளர்களின் பெயர்களை பயன்படுத்துவது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டபோது, மராட்டிய மாநிலத்தில் ஹிங்கோலியில் பழங்குடியின மக்கள் மத்தியில் அவர் பேசினார்.

அப்போது, அந்தமான் சிறையில் இருக்கும்போது வீர சாவர்க்கார் ஒரு கடிதம் எழுதினார். அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம். அந்த கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார்.. இதேபோல் வீர சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார்.

சிறையில் இருந்து வந்த பின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார் என கூறினார். இதுபற்ற சாவர்க்கரின் பேரன் ரஞ்சன் சாவர்க்கர் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து என் தாத்தாவை அவமதித்து பேசி வருகிறார்.

அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வீர சாவர்க்கரை அவமதித்து வருகிறது என்று கூறினார். ராகுல் காந்தி மீது போலீசில் புகார் செய்ய உள்ளேன் என்றும் அப்போது அவர் கூறினார்.


Next Story