ராகுல்காந்தி பாதயாத்திரையால் தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்; டி.கே.சிவக்குமார் பேட்டி


ராகுல்காந்தி பாதயாத்திரையால் தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி பாதயாத்திரையால் தேசிய அரசியலும் புதிய மாற்றம் ஏற்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரசுக்கு புதிய சக்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தியா ஒற்றுமை என்ற பாதயாத்திரையை ராகுல்காந்தி நடத்தி வருகிறார். கர்நாடகத்தில் இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தினமும் காலை 6 மணியில் இருந்தே ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கி விடுவார். நான் கூட 6.30 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கும்படி வலியுறுத்தினேன். ராகுல்காந்தி கேட்கவில்லை. தினமும் சராசரியாக 23 கிலோ மீட்டர் தூரம் அவர் நடக்கிறார்.

நாட்டில் உள்ள எந்த ஒரு தலைவரும் ராகுல்காந்தியை போன்று, மக்களை நேரிடையாக சந்தித்து, அவர்களது கஷ்டங்கள் பற்றி கேட்டது இல்லை. அது ராகுல்காந்தியால் மட்டுமே முடிந்தது. ராகுல்காந்தியின் பாதயாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய சக்தி கிடைத்துள்ளது. இந்த பாதயாத்திரைக்கு விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

தேசிய அரசியலில் மாற்றம்

கர்நாடகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு அளித்திருந்தனர். ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரை தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி. இதற்கு முன்பு இந்திராகாந்தியை காண நாட்டு மக்கள் குவிவார்கள். தற்போது ராகுல்காந்தியை காண மக்கள் குவிந்து வருகின்றனர். கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையால் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

நான் மாநில தலைவராக பதவி ஏற்ற பின்பு நடந்த மேகதாது, சுதந்திர தினவிழா யாத்திரை, ராகுல்காந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க பாதயாத்திரைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், செல்வாக்கும் கிடைத்துள்ளது. ராகுல்காந்தி பதவிக்காகவும், நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் பாதயாத்திரை நடத்துவதாக தேவையில்லாத குற்றச்சாட்டுகளை பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக பாதயாத்திரை நடத்துவதாக ராகுல்காந்தியே தெரிவித்துள்ளார்.

2½ கிலோ எடை குறைவு

கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு நானே நேரில் சென்று ரூ.10 லட்சம் வழங்க உள்ளேன். இதை தவிர்த்து கர்நாடகத்தில் நடந்த பாதயாத்திரையில் வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. பாதயாத்திரைக்கு முழு ஆதரவு அளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பாதயாத்திரையில் ராகுல்காந்தியுடன் சேர்ந்து நானும் தினமும் நடந்து சென்றதால், என்னுடைய எடை கூட 2½ கிலோ குறைந்திருக்கிறது. ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது, கட்சிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story