ராகுல் காந்தியின் அரசியல் எதிா்காலம் தொடா்ந்து மங்கி வருகிறது - பாஜக மூத்த தலைவர் ரவிசங்கா் பிரசாத்


ராகுல் காந்தியின் அரசியல் எதிா்காலம் தொடா்ந்து மங்கி வருகிறது - பாஜக மூத்த தலைவர் ரவிசங்கா் பிரசாத்
x

ராகுல் காந்தியின் அரசியல் எதிா்காலம் தொடா்ந்து மங்கி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கா் பிரசாத் கூறினார்.

பாட்னா,

பாட்னாவில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்திய-சீன எல்லைப் பிரச்னையை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசுகிறாா். ஆனால், உண்மையில் ஜவாஹா்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது.

தேசத்தை கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவா் சா்தாா் வல்லபபாய் படேல். ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதுமே அவருக்கு உரிய மரியாதை அளித்தது இல்லை. தனது நடைப்பயணத்தில் கூட ராகுல் காந்தி படேலுக்கு மரியாதை செலுத்தவில்லை.

இந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக ராகுல் காந்தியும், காங்கிரஸும் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. குஜராத் சோம்நாதா் கோயிலை புதுப்பிக்க சா்தாா் வல்லபபாய் படேல் முழுஅளவில் களமிறங்க முட்டுக்கட்டை போட்டவா் அப்போதைய பிரதமா் நேரு. அக்கோயிலை அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜந்திர பிரசாத் மூலம் திறக்கவும் அனுமதிக்கவில்லை.

அன்று முதல் காங்கிரஸின் இந்துமத வெறுப்பு தொடா்ந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக டெல்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கோஷங்களை எழுப்பிய கன்னையா குமாா் போன்றவா்கள்தான் ராகுலின் பின்னால் உள்ளனா்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவ வீரா்களுக்கு குண்டு துளைக்காத உடைகூட அளிக்கப்படவில்லை. ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சி அடைந்து வரும் தொடா் தோல்விகளால் ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் உள்ளாா்.

இதன் காரணமாகவே மக்களிடையே அவா் வெறுப்புணா்வை பரப்பி வருகிறாா். ராகுல் காந்தி அரசியல் எதிா்காலம் தொடா்ந்து மங்கி வருகிறது. 2024 மக்களவைத் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்திக்கப்போவது உறுதி. இனியாவது ராகுல் காந்தி வெறுப்பு பிரசாரத்தைக் கைவிட்டு தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story