கோவிலில் வழிபட அனுமதி மறுப்பு: தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி
கோவிலில் வழிபட ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அசாம் மாநிலம் நாகன் மாவட்டத்தின் ஹைபரங்கான் பகுதியில் இன்று யாத்திரை தொடங்கியது. யாத்திரை தொடங்குவதற்கு முன் ஹைபரங்கானின் பர்டுரா பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீ சங்கர்தேவ் மத வழிபாட்டு தலத்தில் ராகுல்காந்தி வழிபாடு நடத்த சென்றார்.
ஆனால், ராகுல்காந்தி கோவிலில் வழிபாடு நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் கோவிலுக்கு வெளியே உள்ள சாலையில் ராகுல்காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேவேளை, ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் ராகுல்காந்தி 3 மணிக்கு மேல் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஸ்ரீ சங்கர்தேவ் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி, தற்போது, யார் எப்போது கோவிலில் வழிபட வேண்டுமென பிரதமர் மோடி முடிவெடுக்கிறாரோ? என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். மேலும், நாங்கள் எந்த பிரச்சினையும் செய்ய வரவில்லை, நாங்கள் கடவுளை வழிபட மட்டுமே வந்துள்ளோம்' என்றார்.