பாஜகவில் சேர்ந்தால் வழக்குகள் மூடி மறைக்கப்படுகிறது: சத்தீஷ்கர் முதல் மந்திரி குற்றச்சாட்டு


பாஜகவில் சேர்ந்தால் வழக்குகள் மூடி மறைக்கப்படுகிறது: சத்தீஷ்கர் முதல் மந்திரி குற்றச்சாட்டு
x

ஒருவர் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் அந்த நபர் மீதான அனைத்து வழக்குகளும் மூடிமறைக்கப்படுகின்றன என்று சத்தீஷ்கர் முதல் மந்திரி மத்திய அரசை சாடியுள்ளார்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியது. இதில் முறைகேடு நடந்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழில் அதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தவைர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியது. இதையடுத்து, ராகுல் காந்தியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ராகுல் காந்தியிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக இன்றும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, " பாரதிய ஜனதா அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை தீய நோக்கம் கொண்டது.

கடந்த 8 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் தலைவர்களுக்கு எதிராக எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதில் கூற வேண்டும். ஒரு தலைவர் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் அந்த நபர் மீதான அனைத்து வழக்குகளும் மூடிமறைக்கப்படுகின்றன. மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைப்பதால் போராட்டம் தொடரும்." என்றார்.


Next Story