மந்த்ரி குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

மந்த்ரி குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு
பெங்களூருவில் உள்ள மந்த்ரி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சுஷில் பாண்டுரங்கா. இவர், பொதுமக்களிடம் வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிளாட் கொடுப்பதாக கூறி ரூ.1,350 கோடிக்கும் மேல் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நிர்வாக இயக்குனர் சுஷிலை கடந்த 24-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மந்த்ரி டெவலப்பர்ஸ் குழும நிறுவனத்திற்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள அலுவலகங்கள், சுஷிலுக்கு சொந்தமான வீடுகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
நேற்று காலையில் இருந்து இரவு வரை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றிய சொத்து ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் முறைகேடு தொடர்பாக நேற்று 3-வது நாளாக சுஷிலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர்.