ஒடிசா ரெயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை


ஒடிசா ரெயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை
x
தினத்தந்தி 4 Jun 2023 1:26 PM GMT (Updated: 4 Jun 2023 1:32 PM GMT)

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275 தான் என்றும் ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறியிருந்தார். மேலும் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை 2-வது நாளாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

விபத்து நடந்த பாஹாநாகா ரெயில் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்குள் 2 ரெயில் பாதைகள் இயக்கப்படும் என்றும், சீரடைந்த 2 ரெயில் பாதைகளிலும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படும் என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்டவாளம் தொடர்பான பணிகள் முடிந்து மேல்நிலை வயரிங் பணி நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


Next Story