தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா? எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி


தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா? எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி
x

ஒடிசா ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலகுவாரா என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கேள்விகள் காத்திருக்கின்றன

ஒடிசா ரெயில் கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அனுதாபங்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா என கேட்கின்றனர். அது வருமாறு:-

காங்கிரஸ் தலைவர் கார்கே:-

ஒடிசாவில் நடந்துள்ள பயங்கர ரெயில் விபத்து பேரழிவு ஆகும். இதனால் நாடெங்கும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், சாத்தியமான, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு நான் அறிவுரை வழங்கி உள்ளேன். இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர். தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவிப்போருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த விபத்து தொடர்பாக பிரதமரிடமும், ரெயில்வே மந்திரியிடமும் கேட்பதற்கு நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன. ஆனால் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து முடிகிறவரை அந்தக் கேள்விகள் காத்திருக்கும்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி:-

ஒடிசாவில் பேரழிவாய் நடந்திருக்கிற பயங்கர ரெயில் விபத்தால் நான் மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவிக்கிறேன்.

மந்திரி பதவி விலகுவாரா?

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்:-

ஒடிசாவில் நடந்துள்ள இதுபோன்ற ரெயில் விபத்தை நாடு சமீபத்தில் கண்டது இல்லை. கடந்த காலத்தில் இப்படி பெரும் விபத்துகள் நடந்த போது ரெயில்வே மந்திரிகள் பதவி விலகி உள்ளனர். ஆனால் இதுபற்றி தற்போது யாரும் பேசவில்லை.

துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து குறித்து ரெயில்வேயும், அரசும் விசாரணை நடத்த வேண்டும்.

தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் கிளைடி கிராஸ்டோ:-

ஒடிசா ரெயில் விபத்துக்காக ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் இது எந்தப் பலனையும் தராது. ஏனென்றால் தார்மீகத்தில் பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருந்தால் அது மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களில் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஜ் பூஷண் சரண்சிங்கை பதவி விலகச் சொல்லி இருக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்:-

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரெயில்வே மந்திரி, எப்போதுமே ரெயில்வே அமைப்பு பாதுகாப்பானது, விபத்து நேராது என்று கூறி வந்துள்ளார். 1956-ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தைத் தொடர்ந்து அப்போதைய ரெயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். ஆனால் தற்போது மோடி அரசில் உள்ள ரெயில்வே மந்திரியிடம் இதை நாம் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சமாவது வெட்கம் இருந்தால், ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story