பெங்களூருவில் தொடர் கனமழையால் மக்கள் அவதி
பெங்களூருவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. தலைநகர் பெங்களூருவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை லேசான தூரல் போடுகிறது. ஆனால் இரவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. மேலும் சாலைகளில் 4 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்து விடும் தண்ணீரை வெளியேற்றவும் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜாஜிநகர், விதான சவுதா, இந்திராநகர், எம்.ஜி.ரோடு, அல்சூர், பசவேஸ்வராநகர், கே.ஆர்.மார்க்கெட், கலாசிபாளையா, மெஜஸ்டிக், உப்பார்பேட்டை, காந்திநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
கார்கள் சேதம்
இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்திராநகரில் பெய்த கனமழைக்கு இந்திராநகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு சாலையில் மழைநீர் வெள்ளம்போல சூழ்ந்து உள்ளது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிள்கள், கார்கள் சேதம் அடைந்து உள்ளன.
இந்திராநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது.