பெங்களூருவில் இடி-மின்னலுடன் கனமழை


பெங்களூருவில் இடி-மின்னலுடன் கனமழை
x

பெங்களூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

பெங்களூரு:

பெங்களூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

கனமழை

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு தேவனஹள்ளி விமான நிலையம், எலகங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால், பெங்களூரு விமான நிலைத்திற்கு வர இருந்த விமானங்கள் சென்னைக்கு மாற்றி விடப்பட்டன.

ராஜாஜிநகர்...

இதேபோல் பெங்களூருவில் வர்த்தூர், ஜே.பி.நகர், லால்பாக், ஜெயநகர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, கோரமங்களா, இந்திராநகர், மடிவாளா, ராஜனகுன்டே, தொட்டபள்ளாப்புரா, காடுபீசனஹள்ளி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பனத்தூர் பகுதியில் உள்ள பள்ளி சாலையில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழைக்கு சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. தேவனஹள்ளி பகுதியில் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தன தடுப்புகள் சாய்ந்து விழுந்தன. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

எலகங்கா, கெம்பேகவுடா சர்க்கிள் பகுதியில் 4 அடிக்கு மழைநீர் தேங்கியதால், அந்த பகுதியே குளம்போல் காட்சி அளித்தது. மேலும் ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ச்சியான காற்று வீசியதால் வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.


Next Story