கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு


கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
x

கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் வெயில்

கர்நாடகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உஷ்ணமான சூழ்நிலையால் அவதிப்பட்டு வரும் மக்கள், எப்போது மழை பெய்யும் என எதிர்பார்த்து காத்து உள்ளனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடகத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இடையே 15-ந்தேதி (இன்று) முதல் 18-ந்தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15 முதல் 18-ந்தேதி வரை தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகளிலும், 16-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரை உத்தரகன்னடா பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

பாகல்கோட்டை, பல்லாரி, பீதர், தார்வார், கதக், கலபுரகி, விஜயாப்புரா, கொப்பல் ஆகிய வடக்கு உள்மாவட்டங்களில் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும், பெங்களூரு, மைசூரு, குடகு, ஹாசன், மண்டியா, சிவமொக்கா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட தெற்கு உள்மாவட்டங்களில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் மிதமான மழை பெய்யவும் வாயப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story