123 ஆண்டுகளில் மே மாதத்தில் பெங்களூருவில் 310 மில்லி மீட்டர் மழை பதிவு
பெங்களூருவில் 1957-ம் ஆண்டு 290 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் மே மாதத்தில் பெங்களூருவில் 310 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் 1957-ம் ஆண்டு 290 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் மே மாதத்தில் பெங்களூருவில் 310 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மே மாதத்தில் கனமழை
பூங்கா நகரமான பெங்களூருவில் மற்ற மாதங்களில் மழை, குளிர் அடித்தாலும், மே மாதத்தில் மட்டும் வெயில் வாட்டி வதைப்பது வழக்கம். அதன்படி, கடந்த மாதமும் (மே) வெயில் கொளுத்தியது. பெங்களூரு நகரவாசிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார்கள். எப்போது மழை பெய்யும் என்று காத்திருந்தனர். அதன்படி, கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்து இருந்தது. கடந்த 22-ந் தேதி கொட்டி தீர்த்த கனமழைக்கு விதானசவுதா அருகே கே.ஆர்.சர்க்கிளில் சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் கார் மூழ்கி பெண் என்ஜினீயரும், கே.பி.அக்ரஹாராவில் சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு வாலிபரும் பலியாகி இருந்தார்கள். கப்பன் பார்க் உள்பட நகர் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்திருந்தது.
123 ஆண்டுகளில்...
இந்த நிலையில், 1901-ம் ஆண்டில் இருந்து மழையின் அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவில் கடந்த 1957-ம் ஆண்டு மே மாதத்தில் 290 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததே, இதுவரை சாதனையாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் மட்டும் பெங்களூருவில் 310 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. இதன்மூலம் மழையின் அளவு பதிவு செய்யப்பட்டதில் இருந்து, அதாவது 123 ஆண்டுகளில் பெங்களூருவில் 310 மில்லி மீட்டருக்கு மே மாதத்தில் மழை பெய்திருப்பது இதுவே முதல் முறையாகும். பெங்களூருவில் மே மாதத்தில் வெயில் வறுத்தெடுத்தாலும் சராசரியாக 120 அல்லது 130 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும். அதே நேரத்தில் மே மாதத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அதிக பட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. கடந்த மே மாதம் பெருமளவு மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் காற்று வீசுவதில் மாற்றம் ஏற்பட்டு இருந்ததால், மே மாதம் மழை அளவு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.