பா.ஜ.க.வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன்


பா.ஜ.க.வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன்
x

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் பா.ஜ.க.வில் இன்று இணைந்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ந்தேதி விலகினார்.

இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளார்.

அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் (ஒரு மாநில மந்திரிக்கு இணையானது) என்ற பதவியை வகித்து உள்ளார். பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர், இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேசிய ஊடக குழு உறுப்பினர் என எண்ணற்ற பதவிகளை வகித்து உள்ளார்.

அவர் இந்த பதவிகளை வகித்ததற்காக, காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்திஜி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். கடிதத்தில் அவர், எனினும், 2 தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் நான் கட்சி பணியாற்றுவதற்கான மதிப்புக்குரிய விசயங்களின் அடையாளங்கள் தற்போது இல்லை என உண்மையில் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அதனாலேயே, சமீபத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தேன். தேசிய அளவிலான அமைப்புக்கான பொறுப்பை ஏற்கவும் சமீபத்தில் மறுத்து விட்டேன்.

நான் தற்போது புதிய பாதையை வகுத்து அதில் செயல்படுவதற்கான தருணம் வந்து உள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இதுபற்றிய விலகல் விவரங்களை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை அமைப்புக்கும் முறையாக தெரிவித்து உள்ளேன்.

இதன் தொடர்ச்சியாக, நான் மற்றொரு கட்சியில் சேர போகிறேன் என யூகங்கள் கிளம்பி இருக்கும். ஆனால், நேர்மையாக கூறுவதென்றால், யாரிடமும் நான் பேசவில்லை. உண்மையில், அடுத்து என்ன நடக்க உள்ளது என எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.

எனினும், ஓர் அரசியல் தளத்தின் வழியே நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு என நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய உள்ளேன். நமது சிறந்த தேசம் உருவாக அடிப்படையாக இருந்த தந்தையர் மற்றும் அன்னையர் மற்றும் எனது கொள்ளு தாத்தா சி. ராஜகோபாலச்சாரி ஆகியோரை போற்றி பாதுகாக்கும் வகையில், பொதுவாழ்வின் ஒற்றுமை மற்றும் கருத்துகளை உறுதியாக பின்பற்றி நான் தொடர கூடிய வகையில் அது இருக்கும் என அவர் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடரபாளரான கேசவன் பா.ஜ.க.வில் இன்று இணைய இருக்கிறார் என தகவல் வெளிவந்து உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் மிக பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வில் என்னை சேர்த்ததற்காக, அதுவும் பிரதமர் மோடி தமிழகத்தில் இருக்கும்போது, உங்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

கடந்த ஜனவரியில் காங்கிரசில் இருந்து விலகிய அனில் அந்தோணி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி. முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் நேற்று முன்தினம் இணைந்து உள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் மந்திரி பியூஷ் கோயல் வழங்கினார். கடந்த காலத்தில் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது இளம் தலைமுறையினரும் விலகி வருவது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story